நெல்லிக்குப்பத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா பேச்சு

நெல்லிக்குப்பம், ஆக. 13-

நெல்லிக்குப்பத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று நெல்லிக்குப்பத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் த.மு.மு.கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

விழிப்புணர்வு கூட்டம்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர த.மு.மு.க. சார்பில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சின்னதெருவில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.எம்.ஜின்னா தலைமை தாங்கினார். ஹாவாமொய்தீன், அப்துல்காதர், அப்சில்ஹாதி, ஹாவா நஜிமுதீன், தீன், சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத்தலைவர்அப்துல் ரஹீம் வரவேற்றார்.

கூட்டத்தில் த.மு.மு.க. மாநிலத்தலைவர் டாக்டர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அனுமதி வழங்க வேண்டும்

அரசியல் தூய்மையற்றதாக உள்ளதால் தற்போது தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் அதே சமயம் பேரிடர்கள், சுனாமி, சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறது. தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் பல லட்சம் செலவு செய்கிறார்கள். வெற்றி பெற்றதும் செலவு செய்ததை விட பல மடங்கு சம்பாதித்து விடுகிறார்கள்.

எங்கு குண்டு வெடித்தாலும் முஸ்லிம்கள்தான் காரணம் என்று காவல் துறையினர் பொய் வழக்கு போடுகின்றனர். சுதந்திர தினத்தன்று தீவிரவாதத்தை எதிர்த்து மதுரையில் நடைபெறும் அணி வகுப்புக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். அணி வகுப்பு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதான் நடைபெறும். பயங்கரவாதத்தை முதலில் கையில் எடுத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.தான் முஸ்லிம்கள் அல்ல.

உண்ணாவிரத போராட்டம்

நெல்லிக்குப்பம் பகுதியில் குறுகலான முக்கிய சாலை ஓரத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற கோரி நெல்லிக்குப்பம் நகர த.மு.மு.க. சார்பில் மாவட்ட கலெக்டர், தாசில்தார், நகராட்சி கமிஷ்னர் ஆகியோருக்கு மனு கொடுத்தும் பயன் இல்லை. உடனடியாக நெல்லிக்குப்பத்தில் உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றாவிட்டால் மாவட்ட தலைவர் தலைமையில் கடையை அகற்றும் வரை உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு மாநிலத்தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாநில செயலாளர்கள் அப்துல் சமது, ஜுனைத், ஷேக்தாவூத் (கடலூர்) மாவட்ட துணை தலைவர் முகமது உசேன், பக்ருதீன், அல்லரஹ்மான், அப்துல்காதர், பாய்துல்லாஹ், முகமது ரபீக் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் நகர செயலாளர் அசரப் அலி நன்றி கூறினார்.

Leave a Reply